#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

திமுக தேர்தல் அறிக்கை முழு விவரம்

  20-3-2019 0:14

சென்னை: மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வெளியிட்டார். அதில் 100 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் முழு தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:

* கொள்கை ரீதியாக, மாநில ஆளுநர் பதவியை தி.மு.க. எப்போதுமே எதிர்த்து வந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு பிரிவு மாற்றப்படும் வரை, முதல்வரால் பரிந்துரைக்கப்படும்; தகுதியும் சிறப்பும் கொண்ட மூன்று பெயர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் ஒருவர் தான் மாநில ஆளுநராகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என திமுக வலியுறுத்தும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356ஐ அகற்றிட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும். மாநில பிரச்னைகளை தீர்க்க  ‘மாநிலங்களின் வட்டாரக் குழு’ அமைந்திட திமுக முயற்சிகள் மேற்கொள்ளும்.

* ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்  செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து  விசாரணை நடத்தி முழு உண்மைகளையும் வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு  அமைக்கப்பட தி.மு.க வலியுறுத்தும்.

* தமிழ் நாட்டில் 2016ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் திருப்பூர்-சேலம் நெடுஞ்சாலையில் மூன்று கன்டெய்னர் லாரிகள் ரூ.570 கோடி கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டன.  மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து உண்மைகளைக் கண்டறிய தக்கதொரு விசாரணை அமைப்பை நியமிக்க மத்திய அரசை  தி.மு.க வலியுறுத்தும்.

* கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை தீர விசாரித்து முழு உண்மைகளையும் வெளிக்கொணர மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

* லோக்பால் சட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரத் தேவையான அனைத்து முயற்சிகளையும் திமுக முனைப்புடன் மேற்கொள்ளும்.

* மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவற்றில் 90 சதவிகிதத்திற்குக் குறையாமல் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே  வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டயமாக்கிட திமுக வலியுறுத்தும்.

* ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய  தி.மு.க. வலியுறுத்துகிறது.

* வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் கண்டறியப்பட்டு, காலதாமதம் இன்றி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

* முத்ரா வங்கிக் கடன் திட்டம்  எதிர்பார்த்த வெற்றியை அடைய தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, சிறு, குறு வணிக தொழில் வியாபார நிறுவனங்கள் எளிதில் வங்கிக்கடன் பெற்று பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட கழகம் வலியுறுத்தும்.

* பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, வங்கிகளில் இருந்து  செல்லாத நோட்டுக்களை மாற்றி பணத்தைத் திரும்பப் பெற, நாடு முழுவதும் பட்டி தொட்டிகளில் எல்லாம்  வங்கிகளில் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்று, மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தோர் அனைவரின் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* சாதாரண மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீண்டும் ‘நிர்வகிக்கப்பட்ட விலை முறையின்கீழ் கொண்டுவரப்படும்.

* அண்மையில் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் டி.வி. கட்டணங்கள் தொடர்பான புதிய ஆணை வெளியிட்டதன் விளைவாக  கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆணையை திரும்பப் பெற்று முன்பிருந்த அளவிலேயே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

* நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்பட்டு. மீண்டும் திட்டக்குழு உருவாக்க திமுக பாடுபடும்.

* மத்திய வரிகளின் மொத்த வருவாயில் இருந்து 60 சத விகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

* விவசாய விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியம்/எரிவாயு குழாய்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை சாலைகளின் பக்கவாட்டில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும் என திமுக வலியுறுத்தும்.

* வேளாண் மக்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ளதுபோல், அனைத்திந்தியாவிலும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க தி.மு.க. வலியுறுத்தும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த பட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்துதல்.

* கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

* ஏரிகளை மீட்டெடுத்து பராமரிக்க ஏதுவாக கடுமையான தண்டனைப் பிரிவுகள் உள்ளடக்கிய ஒரு புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

* மேகதாது அணை தொடர்பாக கர்நாடகமும், மத்திய அரசும் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும்  எதிர்ப்பதுடன் திட்டம் வரவிடாமல் தடுக்கப்படும்.

* கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத் திட்டமான பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்கீழ், ஏற்கனவே கேரள அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி, மேலும் சில அணைகள் கட்டப்பட வேண்டும். மேலும், இதன் முக்கிய அங்கமான மேல்நீராற்றிலிருந்து தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு எடுத்துச் செல்ல தேவையான சுரங்கத் திட்டத்தையும் செயல்படுத்திட தி.மு.க. அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும்.

* தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில், கனரகத் தொழிலகங்கள் அமைந்திட திமுக முயற்சிகள் மேற்கொள்ளும். ‘நியூட்ரினோ’ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் முயற்சிகளைக் கைவிடுமாறு மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* பட்டாசுத் தொழிலைப் பாதுகாத்திடும் நோக்கில், மத்திய அரசு உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்து, உரிய உகந்த சூழல் ஏற்படுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மத்திய அரசால்  எடுக்கப்பட வேண்டும் என திமுக வலியுறுத்தி, முயற்சிகள் மேற்கொள்ளும்.

*  ராமநாதபுரம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சூரிய மின் உற்பத்தி அதிக அளவில் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகுந்து இருப்பதால், மத்திய அரசு இவ்விரு மாவட்டங்களிலும் குறைந்த பட்சம், 20,000 மெகா வாட் அளவிற்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

* நாட்டின் உள்நிலப் பகுதிகளில், குறிப்பாக விளை நிலங்களில் எண்ணெய் வளத் தேடலுக்கும் உற்பத்திக்கும் தி.மு.க. தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. அதற்கு பதில்  ஆழ்கடல் எண்ணெய் வளங்களில் இருந்து உற்பத்தியை துவக்க வலியுறுத்தப்படும்.

* விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்வதற்கு ஏதுவாக ஊரக விளைபொருள் விற்பனைக் கழகம் ஒன்றை உருவாக்கும்.
சென்னையில் உள்ளது போல், ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக் கழகம் மதுரையில் அமைக்கப்பட வேண்டும்.

* இந்தியா முழுவதிலும் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் தமிழகத்தில் கலைஞர் தலைமையில் அமைந்திருந்த திமுக அரசு வழங்கியதைப்போல், உதவித் தொகை வழங்கவும் மத்திய அரசுப் பணி நியமனங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் தி.மு.க.வலியுறுத்தும்.

* இந்தியாவில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பகுதியில் உயர்தரத்தில் அமைந்துள்ள 13 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை  பராமரிக்க 10ம் வகுப்புவரை படித்துள்ள 1 கோடி பேர் சாலைப் பணியாளர்களாக நியமிக்க மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தும்.

* தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின்; ஒருசில பிரிவினர் தங்கள் பிரிவை தேவேந்திரகுல வேளாளர் என பெயரிடப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை உரிய முறையில் பரிசீலனை செய்து  அதற்கான தக்கதொரு தீர்வினை விரைவில் கண்டிட வேண்டும் என  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் மத்திய அரசையும் திமுக வலியுறுத்தும்.

* தனியார்துறையிலும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும்.

* இனிமேல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கீட்டை வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது எடுத்திட வேண்டும் என தி.மு.க மத்திய அரசை வலியுறுத்தும்.

* பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் விரைவாகவும், உரிய தீர்வும் காண்பதற்கு மத்திய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் வலுப்படுத்தப்பட்டு சுதந்திரமாக செயல்பட மைய அரசு ஆவன செய்யவேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும்

* அனைத்திந்திய அளவில் பத்தாம் வகுப்பு வரையில் படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்களை மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

* கிராமப்புற பெண்களுக்கு ரூ.50,000 வட்டியில்லா தொழில்கடன் கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களில்  ஒரு பெண்ணுக்கு ஆடு, மாடு வளர்ப்பு, மீன் பண்ணை, மண்பாண்டம் செய்தல் முதலிய சிறு தொழில் வணிகங்களுக்கு ரூ.50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்பட மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* ‘கிராம உத்யோக் பவன்’ சிறப்பு விற்பனை நிலையங்கள் போன்று, நாடு முழுவதிலும், இரண்டு இலட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில், கைத்தறித் துணிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக ‘கவின்மிகு காட்சியகங்கள் அமைக்கப்படும்.

* கடலோரப் பகுதிகளில் புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கவும், காசிமேடு (சென்னை), புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை மேம்படுத்தவும், சேது சமுத்திரத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள முத்துப்பேட்டை, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், தொண்டி முதலிய மீன்பிடி துறைமுகங்களுக்கு மின்வசதி, எரிபொருள் நிரப்பும் வசதி முதலியன வழங்கிடவும், நவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தவும், மீன்பிடித் தொழிலை லாபகரமானதாக ஆக்கும் வகையில், மீன்பிடிப்பதில் நவீன தொழில் நுட்பத்தில் மீனவர்களுக்குப் பயிற்சி தர ஏற்பாடுகள் செய்யவும், மானிய விலையில் நவீன மீன்பிடிக் கருவிகளை வழங்கவும், மைய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களையும், மீனவர்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, “இயற்கைச் சீற்றத்திலிருந்து கடலோரச் சமுதாயத்தினரைப் பாதுகாக்கும்” புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவருமாறு மைய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* முன்னாள் ராணுவத்தினருக்கு உரிய நியாயம் கிடைத்திட ‘ஒரு பதவி - ஒரு ஓய்வூதியம்’ கொள்கையை முழுமையாக செயல்படுத்த தி.மு.க. முயற்சிகள் மேற்கொள்ளும். மேலும், இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்திட அனைத்து அரசு அலுவலகங்களிலும்; ஏனைய அரசு நிறுவனங்களிலும் பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட, பிற பணிகளையும் அவர்களின் தகுதிக்கேற்ப வழங்கிட மத்திய அரசை  திமுக வலியுறுத்தும்.

* இந்தியா முழுவதிலும் உள்ள திருநங்கைகளுக்கும் கிடைத்திட வழிவகுத்திடும் வகையில், மாநிலங்களவையில் ஏற்கனவே தி.மு.க.வால் கொண்டுவரப்பட்டு ஏற்கப்பட்ட தனிநபர் மசோதா  அடிப்படையில் ஒரு முழுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர  திமுக முயற்சிகள் மேற்கொள்ளும்.

* இராமேஸ்வரத்தை இணைக்க புதிதாக ஒரு 6 வழி பாம்பன் சாலைப் பாலம் மற்றும்  சீர்காழி அருகே கொள்ளிடத்தில் புதிய 6 வழிப் பாலம் கட்டவும் மைய அரசை திமுக வலியுறுத்தும்.

* தமிழ் நாட்டில் சென்னை-திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்ற வேண்டியுள்ளது. எனவே, இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துமாறு மைய அரசை திமுக வலியுறுத்தும்.  அதைப்போலவே, மாநிலத்தில் கிழக்கு-மேற்காகச் செல்லும் நாகப்பட்டினம்-தஞ்சாவூர்-திருச்சி-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, விளைநிலங்களைப் பாதிக்காத வகையில் இச்சாலையை 4 வழி, 6 வழிச் சாலையாக மாற்ற தி.மு.க. வலியுறுத்தும்;.

* சென்னை-சேலம் இடையே ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகள், சாலைகள் அனைத்தையும், சாலைகளின் இருபுறமும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தைப் பயன்படுத்தி, அகலப் படுத்தவும், மேம்படுவதற்கும் உரிய முயற்சிகள் மேற்கொள்ள தி.மு.க. வலியுறுத்தும்.

* வானூர்திஇயல் தொடர்பான உயர் தொழில் நுட்பக் கல்வியை வழங்குவதற்காக தமிழ் நாட்டில் திரும்பெரும்புதூரில் வானூர்திஇயல் பல்கலைக் கழகம் காலதாமதமின்றி உடனடியாக நிறுவிட தி.மு.க. வலியுறுத்தும்.

* இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்கத் தி.மு.க. முயற்சிகள் மேற்கொள்ளும்.

* தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் அனைத்தும் அகல ரயில்பாதைகளாக மாற்ற தி.மு.க. வலியுறுத்தும்.

* கல்வி நிறுவனங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ரயில் பயணச் சலுகை வசதி வழங்கப்பட மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரத்திற்கு முதல் கட்டமாகவும், பின்னர் புதுச்சேரி வரையிலும், பறக்கும் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், மதுரை, திருச்சி, கோயம்புத்தனூர், சேலம் ஆகிய மாநகரங்களிலும், பறக்கும் ரயில் திட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மைய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் ரயில்வே தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒன்றை ஏற்படுத்த மைய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

* கார்ப்பரேட் நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும்; தாங்கள் செயல்படும் பகுதியில் 20 கி.மீ. வட்டாரத்திற்குள் வசித்திடும் வேலை வாய்ப்புப் பெற்றிடாத இளைஞர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.10,000 சம்பளத்தில் தக்க பணி நியமனம் வழங்குவது கட்டாயமாக்கப்படும். இதற்கான சிறப்புத் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, மத்திய நிறுவனங்கள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டு 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

*பல்வேறு சமூக ஊடகங்கள் வெளியிடும் அனைத்து வகையான ஆபாசப் படங்கள், செய்திகள் போன்றவற்றை தடுப்பதற்கு உரிய பாராளுமன்ற சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என மத்திய அரசை திமுக வலியுறுத்தும். மேலும் இதுதொடர்பான குற்றங்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பெண்கள் சைபர் குற்றப்பிரிவு அமைக்கப்பட வேண்டுமெனவும் தி.மு.க. வலியுறுத்தும்.

* அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் உள்ள விக்கிரகங்கள், மதச் சின்னங்கள், அரும் செல்வங்கள் அனைத்தையும்  பாதுகாத்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைந்து எடுக்கவும், தேவைப்பட்டால் இதற்கென புதிய சட்டத்தை இயற்றவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கலைஞர் அரசால் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களைப் போல், இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு அவை ‘பெரியார்-ஜோதிராவ் பூலே சமத்துவபுரம்;’ எனப் பெயரிடப்பட வேண்டும்.

* முதியோர் நலன்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும். வங்கியில் வைப்புத்தொகை, சேமிப்பு ஆகியவற்றிற்குக் கூடுதல் வட்டி வழங்குதல், வரிவிலக்குகளில் கூடுதல் சலுகைகள் மூலம் மூத்த குடிமக்களுக்கு நிதிசார் சலுகைகளை வழங்குமாறு மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

‘100 விழுக்காடு வெற்றிக்கு உழைக்க வேண்டும்’: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி  மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாற்பதுக்கு நாற்பது-பதினெட்டுக்கு  பதினெட்டு என 100 விழுக்காடு வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வெற்றிக்கான களம் தயாராகி விட்டது. தமிழகம்- புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிற சட்டமன்றத் தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையாக வெற்றிபெற உழைப்பது ஒன்றே நமது இலக்கு. திருவாரூர் தொகுதியில் தொடங்குகிற பரப்புரைப் பயணம், 40 மக்களவை தொகுதிகளின் வெற்றியையும், 18 தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியையும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

உங்கள் வாக்கு உங்களால் பல வாக்கு என்ற அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகள் குவிந்திட வேண்டும். நாற்பதுக்கு நாற்பது-பதினெட்டுக்கு பதினெட்டு என 100 விழுக்காடு வெற்றியன்றி வேறு சிந்தனைக்கு இடம்கொடுக்காமல் உழைத்திடுவீர். அந்த உழைப்பு தரப்போகும் மகத்தான வெற்றியை மே 23ம் நாள் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிடுவோம். உங்களில் ஒருவனாகக் கேட்கிறேன். உறுதி தாருங்கள் உத்தரவாதம் தாருங்கள் உழைப்பைத் தாருங்கள். முழுமையான வெற்றியைத் தாருங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

 • முதல் கட்டம்

  11 Apr 2019

 • இரண்டாம் கட்டம்

  18 Apr 2019

 • மூன்றாம் கட்டம்

  23 Apr 2019

 • நான்காம் கட்டம்

  29 Apr 2019

 • ஐந்தாம் கட்டம்

  06 May 2019

 • ஆறாம் கட்டம்

  12 May 2019

 • ஏழாம் கட்டம்

  19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications